மருத்துவர் ச.இராமதாசு
உலக தமிழர்கள் அனைவருக்கம் வணக்கம்…
கலை இலக்கியம் அனைத்தும் மக்களின் வாழ்க்கையை பண்படுத்தவேண்டும். அது ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட அதன் மூலம் சமூக மேம்பாட்டிற்காக பங்கீடு இருக்கவேண்டும். அதனால் தான் மண் பயனுறவேண்டும் என்ற முழக்கத்தை முதன்மைப்படுத்தி தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு முழுமையான முற்றிலும் மாறுபட்ட தொலைக்காட்சியை கொண்டுவந்தோம்.
திரைப்படம் மற்றும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளை தவிர்த்து நேயர்களை திரும்பிப்பார்க்க வைக்க இயலுமா என்று வினாவை முன் வைத்து அச்சுறுத்தினர். ஆனாலும் இந்த மாற்று ஊடகத்திற்கு மக்கள் மனதில் இடம் உண்டு என்று தயங்காமல் முன்னெடுத்து சென்றோம். அதற்கான பலனை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். அதோடு கணிசமான விளம்பரங்களின் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு தயாரித்து வணிக ரீதியாகவும் வெற்றி நடைபோட்டுகொண்டிருக்கிறோம்.
தொலைகாட்சியில் திரைப்படங்கள் இல்லையென பலர் குறைபட்டுக்கொள்கின்றனர். பலர் நீங்கள் திரைப்படத்திற்கு எதிரியா? என்றும் கேட்கிறார்கள். நான் திரைப்படத்திற்கு என்றும் எதிரியல்ல. திரைப்படம், தொலைக்காட்சி இரண்டுமே வெவ்வேறு ஊடகங்கள். எனவே விருது பெற்ற திரைப்படங்களை திரையிட தயங்குவதில்லை. அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதி பொதுநல வழக்கு ஒன்று குறித்து அரசு வழக்கறிஞரிடம் ஒரு வினா தொடுத்தார். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது மாதிரி ஒரு தொலைக்காட்சியாவது இருக்கிறதா? என்று ஆதங்கத்துடன் கேட்டார். அவரது வினாவுக்கு விடைசொல்லும் விதமாக மக்கள் தொலைக்காட்சி கட்டுப்பாடற்ற ஊடகங்கள் பெருகிவரும் நிலையில் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு தணிக்கை அவசியம் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதனை செயல் படுத்திகாட்டும் விதமாக மக்கள் தொலைக்கட்சிக்கென்று வரைமுறையும், நெறிமுறையும் வகுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். தொலைந்துகொண்டிருக்கும் தொன்மையான நமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு கூறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் மக்கள் தொலைக்காட்சி தமிழ் பணியை எந்தவித சமரசங்களுக்கும் உட்படாமல் செய்து கொண்டிருக்கிறது.